“தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று (ஜூலை 20) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: “தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும். ஏற்கெனவே நலிந்துள்ள குறு சிறு தொழில்களை இது மேலும் கடுமையாக பாதிக்கும். திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையென மாதம் ரூபாய் ஆயிரத்தை வலது கையில் கொடுத்துவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி அந்த தொகையை இடது கையில் பறித்துக் கொள்கிறது. இது அரசின் தந்திரம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

மின்கட்டண உயர்வால் நூற்பாலைகள், விசைத்தறிகள் மூடும் நிலை உருவாகி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மின் கட்டண உயர்வுக்கு மின்சார வாரியத்தின் கடன் சுமையே காரணம் என்று சாக்குப் போக்கு சொல்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமைக்கு தமிழக அரசின் நிர்வாக சீர்கேடே காரணம். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடக்கூடாது. தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம்.

மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி திங்கள்கிழமை தமிழ்நாடு முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் மின் கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி மனு அளிப்பார்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal