ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் கட்சி பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்த நிலையில் விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 05ம் தேதி கொடூரமான முறை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட ரவுடிகள் மற்றும் திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை தொடர்பான எந்த பேரணியிலும் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்: சில அரசியல் களத்திலே கூலியை வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் நாம் பங்கேற்கக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது அல்லது அந்த படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும். யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று சொல்லி அந்த கூட்டத்திலே வந்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்புக்கு விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை. எந்த தலித் தலைவர்களையும் நாம் இதுவரை விமர்சித்ததில்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கிலும் நம் மீது சேற்றைவாரி பூசி கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். திமுகவை, திமுக அரசை விமர்சிப்பதற்கும் விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கம் துணை நிற்கின்ற தேவை எதுவும் கிடையாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal