தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள விஜய் தொடர்ந்து அரசியல் நகர்வுகளுக்கான அடுத்தக் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை நடிகர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நான் அரசியலில் இறங்கிவிட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கடும் கண்டனங்களையும், நீட் தேர்வுக்கு எதிராகவும், ஒன்றிய அரசு எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது தமிழகத்திலிருந்து மாவட்ட வாரியாக வந்திருந்த தவெக தொண்டர்கள், புதுவை ரயில் நிலையம் அருகிலிருந்து பேண்டு வாத்தியம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புஸ்ஸி ஆனந்த் வீட்டுக்கு படையெடுத்தனர். அங்கு அவருக்கு மாலை, பூங்கொத்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர். அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த் இன்னும் ஒரு வாரத்தில் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.