உள்துறைச் செயலாளராக இருந்த அமுதாவை மாற்றி மூத்த ஐ.ஏ.எஸ்-. அதிகாரி தீரஜ்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக ‘டிக்’ செய்ததன் பின்னணியை தற்போது பார்ப்போம்..!
தமிழகத்தில் தொடர் கொலைகள், கள்ளச்சாரய மரணம் என அடுத்தடுத்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சிகள் கூறி வருகிறது. இந்தநிலையில் தான் சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை, கடலூரில் பாமக நிர்வாகி மீது கொலைமுயற்சி, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மற்றும் மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை என அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியது.
இந்தநிலையில் தான் உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ்யை அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தான் தமிழக உள்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தீரஜ்குமாரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் யார் இந்த தீரஜ்குமார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பணிகளை கவனிக்கும் முக்கிய பொறுப்பில் தீரஜ்குமாரை நியமிக்க காரணம் என்ன என கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்ட தீரஜ்குமார், இவர் 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவில் தேர்வாகி தமிழ்நாட்டில் ஐஏஎஸ் பணியை தொடங்கினார். சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு வணிக வரித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்டார். இது போன்று தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் தான் தீரஜ்குமார். இந்த சூழ்நிலையில் தான் தமிழக அரசின் முக்கிய துறையான உள்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறைக்கு தீரஜ்குமாரை நியமிக்கப்பட்டிருப்பதை காவல்துறை மூத்த அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். தனக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த தீரஜ்குமாரை உள்துறை செயலாளராக மு.க.ஸ்டாலினே நேரடியாக நியமித்திருக்கிறார்.