சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் மக்களவைத் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். 5-வது நாளாக நேற்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘‘பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினாலும் சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை. அவர்கள் வாக்குகள் கிடைக்காததே அதிமுக வேட்பாளர்கள் தோல்விக்கு முக்கிய காரணம். பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணிவைத்திருப்பதாகவே சிறுபான்மையினர் கருதுகின்றனர்’’ என்றனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய பழனிசாமி, ‘‘பாஜக உடன் அதிமுக எப்போதும் கூட்டணி வைக்காது. சிறுபான்மையின மக்கள் மனநிலை எதிர்காலத்தில் மாறும். தொண்டர்கள் யாரும் துவண்டு விட வேண்டாம். கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் நம்பிக்கையை பெறும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம்.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு ஏராளமான திட்டங்களைஅறிவித்திருக்கிறோம். டெல்டாபகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அப்பகுதி விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்திருக்கிறோம். இதை எல்லாம் அப்பகுதி மக்களிடம் அதிமுகவினர் எடுத்துரைக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன்உசேன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் பெறுவது மற்றும் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தருப்பது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.