அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோரை இணைக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக ஜெயலலிதா மறைவுக்கு முன் இருந்த அதிமுக, தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக அதிமுகவினரே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த கட்சி உட்கட்சி பூசல்களால் சிக்கித் தவித்தது.
அதிமுக ஒரு எக்கு கோட்டை என ஜெயலலிதாவே கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி அணிகளாகவும் கட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து விட்டனர், அதிமுக தலைமை மாற்ற வேண்டி நேரம் வந்துவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அதேபோல இத்தனை நாள் கட்சிக்காக தான் ஒதுங்கி இருந்தேன் இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என சசிகலாவும் அறிக்கை விட அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஆனால் யாருக்கும் கட்சியில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சில யூகங்கள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை, என்ன நடந்தாலும் அதிமுக தலைமை பதவியை விட்டு தரப் போவதில்லை என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் சேலம் மாவட்ட அதிமுகவினர்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் சில தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் இடைத்தேர்தல்களை அவரும் புறக்கணித்திருக்கிறார். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்தது பெரிய பிரச்சனை இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ நிச்சயம் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் கூட்டணி கட்சிகளை அதிகமாக சேர்ப்பதன் மூலம் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என நம்புகிறார். கட்சியிலும் தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என அவர் விரும்புகிறார். இதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் சேலம் நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை சமாதானம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
மேலும் பல மாவட்டங்களில் அணிகளாக செயல்படும் நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கும் பதவி கொடுத்து தனது தலைமையை தொடர ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் நடைபெற இருக்கும் மக்களவைத் தொகுதிவாரியான ஆலோசனை கூட்டத்தில் பழனிச்சாமி பல முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.
சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை எதிர் எதிர் துருவங்களாக இருப்பதாக தகவல் வந்திருக்கும் நிலையில் அதனை களைவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் என்ட்ரி இருக்குமா என்பது கேள்விக்குறி தான் என்கின்றனர்.
ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி இணைப்பிற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். ஓ.பி.எஸ். மற்றும் சசிகலாவின் நிலைப்பாடுதான் போகப் போகத் தெரியும் என்கிறார்கள்!