கும்ப ராசியில் பயணம் செய்த சனி பகவான் பின்னோக்கி நகர்ந்து வக்ர நிலையில் பயணம் செய்வார். நவம்பர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்:

லாப சனியால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீடு மாற வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

ரிஷபம்:

சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம்.

கடகம்:

அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும்.

துலாம்:

வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு:

கடன் பிரச்சினை தீரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். எதிர்பாராத பண வருமானம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். வாய் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை.

மகரம்:

வக்ர சனி காலத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். அடுத்தவர்களின் விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவைப்படும்.

கும்பம்:

சனி வக்ர நிலையில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் கை வரும். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் முடிவுக்கு வரப்போகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal