முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ரகசிய இடத்தில் தங்க வைத்த நபரை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் சிபிசிஐடி போலீசார்..!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீனுக்கு முயற்சித்தார் விஜயபாஸ்கர்.

முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய முயன்று வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு பக்கம் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் , அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், போலீசார் எதிர்பார்க்காத வேறு விவகாரங்கள் குறித்த டாகுமெண்டுகளும் கிடைத்துள்ளதாம்.

விஜயபாஸ்கரை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வந்தாலும் அவரது இருப்பிடத்தை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தென்சென்னை மண்டல செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன் தான், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எல்லாமுமாக இருந்து வந்தாராம்.

விஜயபாஸ்கர் தொடர்பான அனைத்து ரகசியங்களும் ரவிச்சந்திரனுக்குத் தான் தெரியும். விஜயபாஸ்கரும் ரவிச்சந்திரனும் நகமும் சதையும் மாதிரி. அதனால் அவருக்கு சொந்தமான ஓரிடத்தில் தான் விஜயபாஸ்கர் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அந்த ரகசிய தகவல் சொல்கிறதாம். அந்த தகவலை புறந்தள்ளி விடாமல், ரகசியமாக விசாரித்து வருகிறதாம் சி.பி.சி.ஐ.டி. அதனால், விரைவில் விஜயபாஸ்கரை அரஸ்ட் செய்து விடுவார்கள் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal