நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஒரு பள்ளி முதல்வர் நீட் வினாத்தாள் விற்பனையில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிய வந்தது. அவரை சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே சி.பி.ஐ. நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சிலருக்கும் நீட் தேர்வு முறைகேட்டில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 16 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

நேற்று அதிரடியாக அந்த 10 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 10 மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன. நாளை மறுநாள் பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியதும் நீட் விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்க வலியுறுத்தி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

2-ந்தேதி பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச உள்ள நிலையில் நீட் விவகாரம் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஓரிரு நாட்களில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal