கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கியை ஈடுகட்டும் விதமாக டாஸ்மாக் கடைகளில் மறைமுகமாக அரசு வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் மறைமுக வசூல் பற்றி அங்கு பணிபுரியும் சேல்ஸ்மேன்கள் தங்களது குமுறலை கொட்டினார்கள். அதாவது, ‘‘சார், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.5 லட்சம் டெபாசிட், குழந்தைகளை பராமரிக்க மாதம் ரூ.5 ஆயிரம் உள்பட பல்வேறு சலுகைகளை முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில்தான் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 விற்றதாக எங்களுக்கு அபாராதம் இன்று (24&06&2024) முதல் அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் கொடுத்து வருகிறார்கள். தோராயமாக ஒரு கடைக்கு ரூ.5,900 அபராதம் விதிக்கிறார்கள்.

ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்றதாக எங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. ஏனென்றால், ரூ.10 கூடுதலாக விற்றதாக அபராதம் விதித்ததால் சம்பந்தப்பட்ட சேல்ஸ்மேன் பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் (விற்பனைக்கு ஏற்ப) அபராதம் விதித்து வருகிறார்கள்.

நாங்கள் முன்பு போல பாட்டிலுக்கு பணம் எடுக்க முடியவில்லை. ஒருசில வாடிக்கையாளர்கள் கறாராக பேசிவருகிறார்கள். தற்போது எங்களுக்கு அபராதம் விதித்திருப்பது நாங்கள் வாங்கும் எங்களது குறைந்த சம்பளத்தில் இருந்துதான் கொடுத்தாக வேண்டும்’’ என்று குமுறினார்கள்.

‘முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்’ என்பார்கள். அதே போல, கள்ளச்சாராய நிவாரண நிதிக்கு, அதே துறையில் உள்ள ஊழியர்களின் தலையில் கை வைத்திருக்கிறது அரசு!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal