‘‘ கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு’’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும்.
கல்வராயன் மலை பகுதிகளில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் துணையோடு கள்ளச்சாராய விற்பனை என செய்தி வருகிறது. விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இது தொடர்பாக, வரும் 26ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், ‘‘கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சியில் 161 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்’’இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுதானே நமது வழக்கம்..!