வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடக்க இருக்கிறது. முதல்வர் பதவியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள ஜெகன் மோகன் ரெட்டி அடித்து ஆடி விளையாடி வருவதுதான், சந்திரபாபு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அந்திரத்தில் ஆட வைத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இதில் நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் இணைந்து நடைபெறுகிறது. இரண்டு தேர்தலும் அங்கே ஒரே கட்டமாக வரும் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கே 175 சட்டசபை தொகுதிகளும் 25 லோக்சபா தொகுதிகளிலும் உள்ளன. அங்குத் தேர்தல் மே மாதம் நடக்கும் நிலையில், பிரச்சாரம் இப்போது தான் மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருக்கிறார். அங்கே ஆட்சியைத் தக்க வைக்க ஜெகன் மோகன் ரெட்டி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே ஆந்திராவில் மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டி வென்று ஆட்சியைப் பிடிப்பதை மாநில அரசு உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மொத்தம் உள்ள 175 சீட்களிலும் க்ளீன் ஸ்வீப் வெற்றியை மக்கள் தர வேண்டும் என்றும் அவர் பேசினார்.

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் என்டிஏ கூட்டணியை மக்கள் நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் அது மக்கள் நலனுக்கு எதிரான கூட்டணி. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஆந்திராவில் உள்ள 175 சீட்களிலும் நமது கட்சிக்கு க்ளீன் ஸ்வீப் வெற்றியை நீங்கள் தர வேண்டும். நமது வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய பாடமாக அமையப் போகிறது. நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திராவில் உள்ள ஏழைகளுக்குக் கடந்த 5 ஆண்டுகளாக மரியாதை கிடைக்கிறது.

மக்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைத் தேர்வு செய்தால் இந்த வளர்ச்சி பணிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடரும். அதேநேரம் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு வாக்களித்தால் மாநிலம் 10 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சின்ன கிராமத்திற்குக் கூட அவர் எந்தவொரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை. இதன் காரணமாகவே நாடு பின்னோக்கி சென்றது” என்று அவர் சரமாரியாகச் சாடினார்.

ஆந்திராவில் “நாங்கள் அனைவரும் தயார்” என்ற தலைப்பில் ஜெகன் மோகன் ரெட்டி பஸ் மூலம் அனைத்து ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் கடந்த முறை தேர்தலுக்கு முன்பு மாநிலம் முழுக்க பாத யாத்திரை சென்றார். அதேபோல இந்த முறை பேருந்தில் யாத்திரை சென்றுள்ளார். இது தேர்தலில் நல்ல பலனைத் தரும் என்று ஜெகன் கட்சியினர் நம்புகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal