தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய நான்கு மாவட்டங்களை மழைவெள்ளம் புரட்டிப்போட்டது. தூத்துக்குடியில் வெள்ளம் சூழந்த நிலையிலும், அத்தொகுதியின் எம்.பி.யும், தி.மு.க. து¬ணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொண்டிருக்கிறார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கனமழை மீட்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி. கனிமொழி டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடி & மதுரை நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அரசு பேருந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடரை யாராலும் தடுக்க முடியாது. ஆனாலும், நடக்கவே முடியாத வெள்ளத்திலும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ததுதான், அப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal