தி.மு.க.வில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? அதே கலைஞரின் மகளான கனிமொழியை தி.மு.க.வின் தலைவராக்க வேண்டியதுதானே? என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருப்பதுதான் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பட்டியலின வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து சமூக நீதியை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மத்திய அரசுக்கு கொடுத்த அரசியல் அழுத்தங்களால் தான் 69 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானது. சமூக நீதியை காத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று சமூக நீதி பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் செயலில் காட்ட மறுந்துவிட்டார். வேங்கைவயல் சம்பவம் நடந்து 180 நாட்கள் கடந்தும் கூட இன்று வரை அவரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் கிரீன்வேஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். திமுகவில் உதயநிதிக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அதே குடும்பத்தை சேர்ந்த கனிமொழி எம்.பி.யை தலைவராக ஆக்க வேண்டியது தானே? 2024 நாடாளுமன்ற தேர்தலோடு திமுக கதை முடியப்போகிறது.

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் உள்ளது. இனி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி அதிமுக நோக்கி வருவார்கள். ஆகையால், இன்னும் 3 மாதத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal