ஆளுநர் மற்றும் அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது அடுத்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசவுள்ளார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அந்த வகையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநில ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவர் என்றும், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசின் சட்டமியற்றும் வழக்கமான போக்கை முறியடிக்க முடியாது என்று உத்தரவிட்டது. அதாவது, சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஆளுநரால் முறியடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்களுக்குமான கடும் கண்டனம் என தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும். அவசியம் என்று அவர் நினைத்தால், திறமையான மூத்த வழக்கறிஞரை அழைத்து தீர்ப்பு குறித்து தனக்கு விளக்கம் அளிக்க சொல்லலாம்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து தனது அடுத்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் விரிவாக பேசப்போவதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “‘மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது’ – மாண்பமை உச்சநீதிமன்றம். அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

உங்களில் ஒருவன் என்ற கேள்வி, பதில் வடிவில் பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை பகிர்ந்து வந்த முதல்வர் ஸ்டாலின், ‘இந்தியாவுக்காகப் பேசுவோம்’ ( Speaking for India Podcast) என்ற பாட்காஸ்ட் தொடரில் பேசி வருகிறார். தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த ஆடியோ சீரியஸ் ஒலிபரப்பாகிறது.

“மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கான எனது குரல்” என்ற தலைப்பில் மூன்று வாரங்களுக்கு முன்பு மூன்றாவது எபிசோடில் பேசியிருந்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து தனது அடுத்த எபிசோடில் பேசப்போவதாக தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal