புதிய மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதுதான் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி டெல்லி வட்டாரத்தில் பேசினோம். ‘‘கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை வகுக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அது கைவிடப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணை தொடங்கியது. இதையடுத்து சிபிஐ சோதனை நடத்தியது.

அதன்பிறகு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் சோதனைகள் மேற்கொண்டு கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது வரை இடைத்தரகர்கள், ஆம்ஆத்மி தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சர் சிங் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்களும் சிறையில் தான் உள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது விசாரணைக்கு ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் மாதம் 2ம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் மூலம் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கூறியுள்ளது. இதனால் அவரும் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் அவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது. இத்தகைய சூழலில் தான் தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெற்றிருந்தது.

அதாவது மதுபான தொழிலதிபர் சமீர் மகேந்திரனுடன், அரவிந்த் கெஜ்ரிவால் பேஸ்டைமில் பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்த விபரத்தை சமீர் மகேந்திரன் அமலாக்கத்துறை விசாரணையின்போது கூறியுள்ளார். அதாவது கடந்த ஆண்டு நவம்பர் 12, 15ம் தேதிகளில் சமீர் மகேந்திரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அப்போது தான் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமீர் மகேந்திரன், ‘‘டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு விஜய் நாயர் தான் ஏற்பாடு செய்து தந்தார். ஆனால் எங்களின் சந்திப்பு நடக்கவில்லை. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் பேஸ்டைம் மூலம் வீடியோ காலில் பேசினோம்’’ என தெரிவித்துள்ளார்.

இந்த விபரத்தை அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலும், ஐந்து மாநிலத் தேர்தல் நடக்கவிருப்பதாலும், அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal