அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு் சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். 120 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கேட்டு இரண்டு முறை மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு முறையும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது பதில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டிக்கும் வகையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர் செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் காவலை வருகிற 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.