தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் மீதும் இதுநாள் வரை சவாரி செய்து வந்தது பா.ஜ.க.! ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளும் பா.ம.க.வை கண்டுகொள்ளாததால், அக்கட்சிக்கு பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், பா.ம.க.வைப் பொறுத்தளவில் விழுப்புரம், வேலூர், திருவள்ளுர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக முன்பு வலம் வந்தது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளும் முதலில் பா.ம.க.விற்குத்தான் வலைவிரிக்கும்.
அதன் பிறகு நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கை இழந்தது பாட்டாளி மக்கள் கட்சி. கடந்த 2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களில் தே.மு.தி.க.வின் நிலைப்பாட்டை இருபெரும் திராவிட கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் உற்றுநோக்க ஆரம்பித்தன. அதன் பிறகு விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, தே.மு.தி.க. என்ற கட்சி மவுசை இழந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஒரே சமயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் வெளியாகி அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தற்போது, தே.மு.தி.க.வை, பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்தக்கட்சியும் கண்டுகொள்வதில்லை. அதே நிலைதான் பா.ம.க.விற்கும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, கடுமையான எதிர்ப்பையும் மீறி வன்னியர்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கியும், பா.ம.க.விற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க.வை தி.மு.க., அ.தி.மு.க. என இருபெரும் கட்சிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
ஆனாலும், சமீபத்தில் நெய்வேலியில் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்தி ‘மாஸ்’ காட்டினார். இதனை தி.மு.க.வும் ரசிக்கவில்லை. இந்த நிலையில்தான், தற்போது பா.ம.க.விடம், பா.ஜ.க. மட்டும் பேச்சுவார்த்தை நடத்தவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனை ‘ஐயா’வும் கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம். எனவே, இந்தமுறை பா.ம.க.விற்கு பா.ஜ.க. கூட்டணியில் இணைவதைத்தவிர வேறுவழியில்லை. அந்தளவிற்கு அக்கட்சியின் நிலைமை இருக்கிறது’’ என்றனர்.