திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு டிச.17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறாராம்.
கடந்த 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி முறைப்படி தொடங்கப்பட்டது. அந்த அணியின் 2-ம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றபோது, 7 அமைப்பாளர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1983-ம் ஆண்டில் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக மு.க.ஸ்டாலின் உயர்த்தப் பட்டார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியை மு.க.ஸ்டாலின் வகித்து வந்தார். அணியின் முதல் மாநாட்டை 2007-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடத்தினார். இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றார். அப்போது இளைஞரணிச் செயலாளர் பதவி அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
பின்னர், அப்பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படுவதாக கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, அணியின் 2-வது மாநில மாநாடு நடத்த திமுக தலைவர் அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போதுமாநாடு குறித்து அறிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கடந்த 2007-ம் ஆண்டு டிச.15-ம் தேதி கட்சி வரலாற்றில் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு முத்திரை பதித்து திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, வரும் டிச.17-ம் தேதி (ஞாயிறு) திமுக இளைஞரணியின் 2-து மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தலைமையின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சரும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘பெருமை மிகு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை, இந்திய அரசியலில் திருப்புமுனை மாநாடாகவும், தமிழக வரலாற்றில் தடம்பதிக்கக் கூடிய மாநாடாகவும் மாற்ற இன்றிலிருந்தே உழைக்க உறுதியேற்போம்’’ என குறிப்பிட் டுள்ளார்.
இளைஞரணியின் மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டிற்குப் பின்னர் ‘ட்விஸ்ட்’ இருக்கிறது என்கிறார்கள் அறிவாலயத்தின் மூத்த நிர்வாகிகள். இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம்.
‘‘சார், இளைஞரணியின் மாநிலத்தலைவராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் மு.க.ஸ்டாலின். அதற்கு பின்பு மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர். கட்சியின் செயல் தலைவர், கட்சித் தலைவர், முதல்வர் என படிப்படியாக உயர்ந்து தற்போது தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வந்த பாதை கரடு முரடானது, முட்கள் நிறைந்த பாதை… ஆனால், அந்த கஷ்டத்தை உதயநிதி ஸ்டாலின் அனுபவிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் சீனியர்கள். தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவும், மாநில இளைஞரணிச் செயலாளராகவும் இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகப் போகிறார் என்ற தகவல்கள் சமீபகாலமாக றெக்கை கட்டிப் பறந்தன. ஆனால், அப்படி நடக்கவில்லை.
இந்த நிலையில்தான், இரண்டாவது இளைஞரணி மாநாடு நடந்து முடிந்த பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடந்து முடிந்த பிறகு, கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கப் போகிறாராம்’’ என்றனர்.
இரண்டாவது இளைஞரணி மாநாடு பற்றி இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், சமீபத்தில் தான் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் முதல், மாவட்டச் செயலாளர்கள் வரை தங்களது வாரிசுகளுக்கு காய் நகர்த்தினர். ஆனால், கட்சிக்காக யார் தீவிரமாக, விசுவாசமாக உழைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு பதவி தேடி போனது. சிபாரிசுகளை புறந்தள்ளிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இது பற்றி அவரே ஒரு மேடையிலும் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் இரண்டாவது இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்த உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவிற்கு ஏற்ப இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தற்போதே இளைஞரணி மாநாட்டை ‘அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டை’ விட இந்தியாவே வியக்கும் அளவிற்கு நடத்த வேண்டும் என திட்டமிட்டு வருகிறாராம்! தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு இப்போதே சில அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறாராம் எஸ்.ஜோயல். எனவே, இளைஞரணி இரண்டாவது மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். அந்த மாநாடு முடிந்த பிறகு மகுடம் சூடிவிடுவார் உதயநிதி ஸ்டாலின்’’ என்றனர்.