மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உதயநிதி குறித்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அதாவது ராஜஸ்தானில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் குடும்பத்தை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதராக்க வேண்டும் என்று சோனியாகாந்தி துடித்துக்கொண்டிருக்கிறார். தேஜஸ்வி யாதவை பிரதமராக்க வேண்டும் என்று லாலு கணக்குப் போட்டு வருகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சகோதரரை அங்கு முதல்வராக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படி குடும்ப ஆட்சிகள் நடக்கும் மாநிலங்களில், மக்கள் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியாது. குடும்பம் மட்டுமே வளர்ச்சிப் பாதையில் செல்லும்! குடும்ப அரசியலையும், ஊழிலையும் ஒழித்தே தீருவோம்’’ என்று கர்ஜித்திருக்கிறார்.

இது பற்றி மேலிட வட்டாரத்தில் சிலரிடைம் பேசினோம். ‘‘நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உதயநிதி துணை முதல்வர் ஆவது உறுதி ஆகிவிட்டது. அடுத்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை உளவுத்துறையின் மூலம் ஸ்மெல் செய்த ‘மேலிடம்’ குடும்ப அரசியலுக்கு எதிராக கர்ஜித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த இரண்டாண்டில் முக்கியத் துறைகளை கைவசம் வைத்திருக்கும் அமைச்சர்களின் முறைகேடுகளை உண்ணிப்பாக கவனித்து வருகிறது வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும். எனவே, இன்னும் சில மாதங்களில், ‘சில’ வருமான வரித்துறையால் வளைக்கப்படலாம்’’ என்றனர்.

இதற்கிடையே 30 கோடி ரூபாய் விவகாரத்தையும், வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தூசி தட்டி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் உதயநிதி மீது மத்திய உள்துறையின் பார்வை அதிகரித்து கொண்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal