ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இவர்கள் மூவரைத் தவிர யார் வந்தாலும், இணைப்பது பற்றி கட்சி மேலிடம் பரிசீலனை செய்யும்’’ என்றார்.

ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கும் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா? என ஓ.பி.எஸ். அணியில் உள்ள எம்.ஜி.ஆர். காலத்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

எடுத்த எடுப்பிலேயே, ‘‘தம்பி அப்படியொரு எண்ணவோட்டம் எங்களுக்கு இல்லை. இது போன்ற வதந்திகளை கிளைப்பிவிடுவது எடப்பாடி தரப்புதான். காரணம், ‘அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும்’ என்று பி.ஜே.பி. அழுத்தம் கொடுத்துவருகிறது. எனவே, நாங்கள் அங்கு சென்றுவிட்டால் ஓ-பிஎஸ் மட்டும் தனிமரமாக இருக்கிறார். எல்லோரும் எங்களிடம் வந்துவிட்டார்கள் என்று மேலிடத்திடம் சொல்வார்கள். நாங்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு அரணாக இருப்பதை எடப்பாடியார் தரப்பு விரும்பவில்லை.

இதனால், நாங்கள் அ.தி.மு.க.வில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்று அவர்களே ‘பற்ற’ வைத்துவிடுகிறார்கள். அது போதும் நடக்காது… ஒரிஜினல் அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை காலமும், அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்ட தொண்டனும் விரைவில் நிரூபிப்பார்கள். தற்போது சேலத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக, தற்போது கூட ஓ.பி.எஸ்.ஸை சந்தித்துவிட்டுதான் வந்தோம். வதந்திகளை நம்பவேண்டாம்’’ என்றார்.

திருச்சி மாநாட்டுக்குப் பிறகு, அடுத்து சேலம் மாநாடா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal