அலைபேசி மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சு… தொண்டர்கள் சந்திப்பு… ஆன்மிகப் பயணம்… என அ.தி.மு.க.வைக் கைப்பற்ற சசிகலா பகீரத முயற்சி எடுத்தும் பலன் கொடுக்கவில்லை!

இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு டெல்லி மேலிடத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். இது பற்றி டெல்லி சோர்ஸுகளிடம் பேசினோம்.

‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அ.தி.மு.க. தன்வசம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தார் சசிகலா. ஆனால், முக்கியமான நிர்வாகிகள் எல்லோரும் மௌனம் காத்தனர். காரணம், கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் செல்வாக்கை எடப்பாடியார் மீண்டும் நிரூபித்துக் காட்டினார். கொங்கு மண்டலத்தில் நிலைமை தலைகீழாக மாறியிருந்தால், அ.தி.மு.க.வில் காட்சிகளும் மாறியிருக்கும், ஆனால், அப்படி எதுவுடம் நடக்கவில்லை!

தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், ‘அ.தி.மு.க. என்றைக்கிருந்தும் நம்வசம்தான்’ என்ற அவரது நம்பிக்கை மற்றும் முயற்சி வீண் போகவில்லை. டெல்லியிருந்து கிடைத்த தவல்கள் தற்போது அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அமித் ஷாவை எத்தனையோ முறை பார்க்கவும், பேசவும் திட்டமிட்ட சசிகலாவின் முயற்சி தொடர் தோல்வியை சந்தித்தது. இதற்கான முயற்சியை எடுத்தது, அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான விஜயசாந்திதான்.

ஏற்கனவே பலமுறை விஜயசாந்தி இது பற்றி ‘மேலிடத்தில்’ பேசும்போது, தவிர்த்து வந்தார்களாம். தற்போது, சசிகலா குறித்து ‘மேலிடம்’ நடிகை விஜய சாந்தியிடம் நல்ல தகவலை பாஸ் செய்திருக்கிறார்களாம். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு டெல்லி செல்லும் சசிகலா, ‘முக்கிய புள்ளி’யை சந்தித்து முடிவுகளை எடுக்க இருக்கிறாராம். இந்த விவகாரம், ஓ-.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப்பிற்கும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்’’ என்றனர்.

டெல்லி மேலிடத்தின் ‘மனமாற்றம்’ பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. வேறு; இப்போதுள்ள அ.தி.மு.க. வேறு! தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா பாணியை கையிலெடுத்திருக்கிறார். இதனால் அமைச்சர்கள்தான் அப்செட்! மக்களும், கட்சி நிர்வாகிகளும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்! சமீபத்தில் வெளியான சர்வே முடிவு கூட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் இமேஜ் உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆனால், அ.தி.மு.க.வின் இமேஜ் மேலும் மேலும் சரிந்துகொண்டிருக்கிறது. இரட்டைத் தலைமையால், அ.தி.மு.க தொண்டர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். இரண்டு ராஜ்யசாபா சீட்டுக்கு யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் இவ்வளவு குழப்பம். இதே நிலை நீடித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு சீட்டு என்பதில் இன்னும் குழப்பம் ஏற்படும். இப்படி குழப்பத்தில் இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், பா.ஜ.க.விற்குதான் சறுக்கல் ஏற்படும்.

முதல்விஷயம் ஒன்று பட்ட அ.தி.மு.க.வை உருவாக்குவது அல்லது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது என ‘மேலிடம்’ முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், தனித்துப் போட்டியிட்டால் ஒரு சில இடங்கள் கூட கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!

தமிழகத்தில் அ.தி.மு.க. பிரிந்து கிடப்பது பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர, வெற்றிக்கு உதவாது என்பதை உணர்ந்துதான் மேலிடம் சில முடிவுகளை எடுத்திருக்கிறது. அது சசிகலாவிற்கு சக்ஸஸ் தரக்கூடியாக அமையும்’’ என்றார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal