தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அக்கட்சியினர் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான், தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள், பிரதமர் பதவிக்கு யாருக்கு ஆதரவு ஆகியவை தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்-, சி வோட்டர் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின் படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 41% பேரும்; 44% பேர் திருப்தியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். மொத்தம் 85% பேர் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 17%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 30% பேரும் திருப்தி அளிப்பதாக 50% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 13%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 35% பேர் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக 10% பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் 17% பேர்தான் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும், 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமோக ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 54% பேரும் பிரதமராக மோடியே நீடிக்க 32% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal