அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலா இணைவாரா..? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது சசிகலா பற்றி ‘பற்ற’வைத்துவிட்டு, அப்படியே அமைதியாகிவிடுகிறார் ஓ.பி.எஸ்.
இந்த நிலையில்தான் சசிகலா விவகாரம் பற்றி இன்றைக்கு மகளிர் தினத்தன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க. தலைமையில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் மற்றும் மூத்த ர.ர.க்களிடம் பேசினோம்.
‘‘ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பி.எஸ். முதல்வரானார். அப்போது, அவரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கிய (மிரட்டி வாங்கியதாக சொல்லப்பட்டது) சசிகலா அன்ட்கோவினர்! அதன் பிறகு முதலமைச்சராகவும் பதவியேற்க முடிவு செய்தார் சசிகலா! சசிகலா முதல்வரானால், தமிழகத்தில் அ.தி.மு.க. மூலம் பா.ஜ.க. காலூண்ற நினைப்பது கானல் நீராகிவிடும் என்று நி¬னைத்த ஆடிட்டர் ஒருவர், ஓ.பி.எஸ்.ஸை தன் வசப்படுத்தி ‘தர்ம யுத்தம்’ நடத்த ஆணையிட்டார்.
ஓ.பி.எஸ்.ஸும் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்களைத் தவிர்த்து யாரும் பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியை எடப்பாடியார் தக்க வைத்துக்கொண்டார். (ஓரிரு மாதங்களில் கலைந்துவிடும் என்று சொல்லப்பட்ட அரசு, தன்து ஆயுட்காலம் முழுவதையும் முடித்தது) அதன் பிறகு எடப்பாடியார் தலைமையில் இருந்த அரசுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்திலேயே ‘சோதனை’கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் ‘மேலிட’ ஆலோசனையின் படி ஓ.பி.எஸ்-, இ.பி.எஸ். இணைந்தனர்.
‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று ஓ.பி.எஸ். அணியின் வ.மைத்ரேயன் கூறிவந்தது, இத்தனை வருடங்கள் கழித்து பூதாகரமாக வெடித்துள்ளது. சமீபத்தில் ஓ.பி.எஸ்.ஸின் பண்ணை வீட்டியில் சசிகலாவிற்கு (ஓ-.பி.எஸ்.ஸின் அனுமதியில்லாமல்! என்று சொல்லப்பட்டது.) ஆதரவாக மா.செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஓ.பி.எஸ். தம்பி ராஜா!
கொந்தளித்துப் போன எடப்பாடியார் சேலத்தில் இருந்தபடியே, செம்மலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓ.பி.எஸ். பண்ணை வீட்டில் சசிகலாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மா.செ.க்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று ஓ.பி.எஸ். எதிர்பார்த்து இருந்தாராம். ஆனால், ‘ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்ததே (உள்ளுக்குள்) தவிர! எந்தவொரு மாவட்டச் செயலாளரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லவில்லை. (அன்றாவது 11 எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். இன்றைக்கு ஒரு மா.செ. கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. எல்லோரும் எடப்பாடியாரின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுக்கோப்பாக இருக்கின்றனர்)
ஓ.பி.எஸ்.ஸின் இரண்டாவது முயற்சியும் தோல்வியடைந்தது. அதாவது, அ.தி.மு.க.வில் எடப்பாடியாரைத் தவிர்த்து ஓ.பி.எஸ்.ஸுக்கு மா.செ.க்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது வெட்டவெளிச்சமானது. இன்னும் சொல்லப்போனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸின் கையெழுத்தோடு, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார், அவரது தம்பி ராஜா!
சசிகலாவின் வருகையை எடப்பாடியார் எதிர்ப்பதற்கு காரணம், சசிகலா உள்ளே வந்தால், மொத்த மன்னார்குடியும் உள்ளே வந்துவிடுமே என்ற கவலைதான் எடப்பாடிக்கு பிரதானமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இன்றைக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்து கொள்கின்றனர். மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வுக்கு வர உள்ளநிலையில், சசிகலா சர்ச்சைக்கு அநேகமாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற
சசிகலாவை இணைக்கும் முடிவை புறக்கணிக்கும்படி, அதிமுக தலைமையை, பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையானது, மத்திய உளவுத் துறை தரப்பில் பாஜக மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை தொடர்ந்து, அதிமுகவில் சசிகலாவை சேர்க்க பாஜக மேலிடம் ஓகே சொல்லவில்லையாம். சசிகலாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய அளவில் மக்களிடத்தில் ரெஸ்பான்ஸ் இல்லையாம்!
காரணம், சசிகலாவை அதிமுகவில் இணைத்தால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினரின் ஆதரவு மட்டும் தான் கிடைக்கும். ஆனால், மற்ற ஜாதிகளால் பாதிப்பு ஏற்படும். இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் பலவீனத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சசிகலா எந்த ஒரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை இதுவரை நிரூபிக்க முடியவில்லை. எனவே சசிகலாவை கட்சியில் சேர்க்கும் முடிவை கைவிடும்படி அதிமுகவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், தினகரனுக்கும், சசிகலாவிற்கும் இடையே முட்டலும் மோதலும் ஏற்படுவதாக ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். சசிகலாவின் ஒவ்வொரு அசைவையும் டி.டி.வி.தான் முடிவு செய்கிறாராம். இந்த விஷயத்தையும் மேலிடம் ஸ்மெல் செய்துவிட்டது. இதற்கு மேலும் ஓ.பி.எஸ். மறைமுகமாக சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்தால் அவரே கட்சியை விட்டு நீக்கப்படலாம் என்பதுதான் தற்போதைய நிலைமை!
எனவே, சசிகலா விவகாரத்திற்கு இன்றைக்கு அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் எடப்பாடியார் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் இறங்க இருக்கிறாராம்’’ என்றனர்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகம் உள்பட இந்தியாவில் ஒரு ‘மாற்றம்’ ஏற்படும் என்ற தகவல்களும் வருகிறது… பொறுத்திருந்து பார்ப்போம்..!
