கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்திர விழாவிற்கு தமிழக மீனவர்கள் சென்றுவர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘‘கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வோராண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது தமது கவனத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர் என்றும், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கடிதத்தினை வழங்கினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal