சென்னை தெற்கு மாவட்டம், வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்து துரைவீரமணி தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் துரை வீரமணி நிரந்தரமாக நீக்கி (டிஸ்மிஸ்) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற, அயப்பாக்கம் ஆர்.வினோத் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துரை வீரமணி கடந்த சில மாதங்களாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தி.மு.க.வில் சேர்ந்த போது துரைவீரமணி தனது எதிர்ப்பை தெரிவித்தார். கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று துரை வீரமணி எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெஞ்சமின் வருகையால் அது நடக்காது என்று கருதினார்.

தி.மு.க.வில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதிய துரை வீரமணி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கு புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் ஒன்றிய செயலாளர் துரை வீரமணியை கட்சியை விட்டு நீக்கி மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal