இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், ‘அ.தி.மு.க.வில் உள்ள எம்.ஜி.ஆர். விசுவாசிகள் த.வெ.க.வில் இணைந்துவிட்டனர்’ என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய நிலைமையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் சுமார் 2 மணி நேரமாக ஆலோசனை நடைபெற்றிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டு இறுதியாக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தேர்தல் தோல்வியில் இருந்து அதிமுக அடுத்தடுத்த சந்தித்த அனைத்து தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்தாலும், 2026ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்வி அந்தக் கட்சியை அதளபாதாளத்திற்கு இழுத்துச் சென்றது. இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக சென்ற நிலையில், அக்கட்சியின் 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும், வெளிப்படையாக கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற கொறடாவின் உத்தரவை எதிர்த்து ஆளும் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

இதன் பிறகு நடந்த சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிருப்தி அணியில் இருந்த எஸ்.பி. வேலுமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் செயல்பட தொடங்கினார். இருந்தபோதிலும், அவரது மாவட்டச் செயலாளர் பறிக்கப்பட்டு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இதில் எஸ்.பி. வேலுமணிக்கு உடன்பாடு இல்லாமல் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தவும் செய்திருந்தார்.

அதேசமயம், சி.வி. சண்முகம், இரண்டு விஜயபாஸ்கர்கள் ஆகியோர் தனித்து நின்றிருந்தனர். திடீரென இரண்டு விஜயபாஸ்கர்களும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இப்படியாக அதிமுகவில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்துவந்த சூழலில், தமிழ்நாட்டில் காலியாக இருந்த ஏழு தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்தது.

இரண்டு தொகுதிகளிலும் முன்னதாக அதிமுகவில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதே வேட்பாளர்கள் தவெகவில் போட்டியிட்டு வென்றனர். மேலும், அதிமுக வலுவாக இருக்கக்கூடிய தொகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

குறிப்பாக அதிமுகவின் வலுவான மண்டலமாக கருதப்படும் கொங்கு மண்டலத்திற்குள் வரும் தாராபுரத்திலேயே அதிமுக படுதோல்வியை சந்தித்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதன் மூலம், அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் நிறுவன நாள் வர இருக்கும் நிலையில், அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் பேச்சாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருந்தது. இதில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், சி.வி. சண்முகம் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதே சமயத்தில் விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரை மாற்ற வேண்டும் எனும் தீர்மானம் கொண்டுவரப்படலாம் எனவும் தகவல்கள் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலின் பின்னணியில்தான் இன்று எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர், சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் மூலம், அதிமுகவின் அதிருப்தி அணி மீண்டும் வலுபெற தொடங்கியிருக்கிறதோ எனும் கேள்வி எழுந்துள்ளது.

தவிர, அ.தி.மு.க.வில் உள்ள 28 எம்.எல்.ஏ.க்களுடன் த.வெ.க.வில் இணைந்தால், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. எனவே, 28 எம்.எல்.ஏ.க்களுடன் த.வெ.க.வில் இணைவதற்கான ரகசிய பேச்சுவார்த்தை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் நடந்ததாகவும் தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal