தமிழ்நாட்டில் முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்தித்து பேசியதுடன், மறுநாள் பிரதமர் மோடியின் தனிப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கூட்டணியில் இருந்தாலும், மாநில அரசின் கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்ட விஜயின் நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக அரசில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சரவையிலும் இரு இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கூட்டணியில் சில சலசலப்புகளும் தொடர்ந்து வருகிறது. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில்
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 10-ம் தேதி தமிழ்நாடு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே கூட்டணியில் இருந்தாலும் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் சந்தித்து பேசுவது தொடர்பாக 9-ம் தேதி பிற்பகல் வரை எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. எனினும் அதன் பின்னர் இவர்களது சந்திப்பு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு முடிவடைந்த அடுத்த நாளே அரசுமுறை பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இருவரும் இணைந்து பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து ரயிலில் ஒன்றாக பயணம் செய்தனர்.
ஐஐடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமருடன் ஓரே மேடையில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு மாநில அரசின் கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கிடையே, பிரதமர் மோடி பிற்பகல் 1.40 மணியளவில், ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். அரசு நிகழ்ச்சி சாராத பிரதமரின் தனிப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்த இந்த நிகழ்வில் முதல்வர் விஜயும் கலந்துகொண்டார். அதன் பிறகு விமான நிலையத்திற்கு தானே சென்று வழியனுப்பியும் வைத்தார் விஜய்!
பொதுவாக எதிர்க்கட்சி அல்லது எதிர் கூட்டணியை சேர்ந்த பிரதமர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாலும், அவர்களை தமிழ்நாடு முதல்வர் விமான நிலையத்தில் வரவேற்பது, அரசு நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொள்வது எல்லாம் வழக்கமான நிகழ்வாகவே இருந்துள்ளது.
ஆனால், பிரதமரின் தனிப்பட்ட நிகழ்வில், எதிர்கூட்டணியில் இருக்கும் முதல்வர் கலந்துகொள்வது என்பது தமிழ்நாட்டுக்கு முற்றிலும் புதிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அதாவது பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்துள்ள தவெக, பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு அதிக முக்கியத்துவத்தை முதல்வர் விஜய் அளித்துள்ளார் என்ற அரசியல் பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், முதல் நாளில் கூட்டணிக் கட்சித் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்ததும், மறுநாள் எதிர் அணியில் இருக்கும் பிரதமரை சந்தித்து அரசு ரீதியிலாக இணைந்து செயல்பட வலியுறுத்துவதும் மிகவும் உற்றுநோக்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் விஜய் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்!
