மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றது. ‘தி.மு.க.வுக்கு தோல்வியில் வெற்றி… த.வெ.க.வுக்கு வெற்றியில் தோல்வி’ என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
ஆம். இடைத்தேர்தல் முடிவுகள் முதல்வர் விஜய்யை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆனால்தான் அதிருப்தி வாக்குகள் உருவாகும். ஆனால், மூன்று மாதங்கள் கடந்த நிலையில் த.வெ.க. மீது கடுமையான அதிருப்தி இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வேட்பாளர் யாரென்றே தெரியாது. விஜய்யும் பல சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு போகவில்லை… போகவும் முடியவில்லை. விஜய் செல்லும் வழியெல்லாம் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், ஆட்சியைப் பிடித்தபிறகு விஜய்க்கு அதே செல்வாக்கு இருக்கிறதா? என்றால் இல்லை. இதற்கு காரணம், விலை வாசி உயர்வு… தேர்தல் வாக்குறுதிகள்… என்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியை மற்றக்கட்சிகள் எல்லாம் உடனடியாக நிறைவேற்றியதா என்றால் அதுவும் இல்லை!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விவசாயக்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்துவிட்டு 2021 ல் நின்றுமே, அ.தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் 4 மாதத்திற்குள் நடந்த இடைத்தேர்தலில் பெரிதாக எதிரொலிக்க வாய்ப்பில்லை. அதே சமயம், இடைத்தேர்தல் எதற்காக நடந்தது? என்பதை தொகுதி மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தவிர விலைவாசி உயர்வு… விவசாயிகள் வேதனைதான்… முதல்வர் விஜய்க்கு சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில்தான் வருகிற டிசம்பரில் நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதைய சூழலில் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதுபற்றி பனையூர் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘ சார் இடைத்தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளிலுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வலுவான போட்டியைத் தந்துள்ளது. அதிமுகவும் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் தனது அடிப்படை வாக்குகளைத் தக்கவைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த அசைக்க முடியாத பலம், அடிமட்ட அளவில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியலாம்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது கிராமப்புற வார்டுகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ளூர் தனிநபர்களின் செல்வாக்கை மையமாகக் கொண்டு நடப்பதாகும். தமிழகத்தின் பெரும்பாலான ஊராட்சி மன்றங்கள், நகர்மன்றங்கள் மற்றும் மாநகராட்சி வார்டுகளில் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட திமுக மற்றும் அதிமுகவின் அடிமட்டக் கட்சி அமைப்புகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான கவுன்சிலர் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியான சூழல் நிலவுகிறது. புதிய கட்சியாக உருவெடுத்து ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவிற்கு, அனைத்து வார்டுகளிலும் வலுவான உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கட்டமைப்புகள் இன்னும் முழுமையாகக் உருவாக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தினால், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்படும். அது ஆளும் தவெக அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் எனத் தலைமை கருதுகிறது. மேலும், அடிமட்டத் தேர்தலில் ஏற்படும் தோல்வி தவெகவின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, தேவையற்ற தேர்தல் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமல் தள்ளிப்போடுவதே சரியான முடிவாக இருக்கும் என்ற முடிவுக்கு முதல்வர் விஜய் வந்துள்ளதாகக் தெரிகிறது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை விட, அதில் தெரிந்த எச்சரிக்கை மணிகளே தவெகவை இந்த முடிவை நோக்கி நகர்த்தியுள்ளன. எனவே, இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் என ஜான் ஆரோக்கியசாமி முதல்வருக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறாராம்’’ என்றனர்.
ஒரு பக்கம் கட்சியின் கட்டமைப்பு… மறுபக்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மை… என முதல்வர் விஜய்க்கு சவால்கள் காத்திருக்கிறது!
