சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி – வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இன்று காலை 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போரூருக்கு சென்றபோது, விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை ரோடுஷோ மேற்கொண்டார். அப்போது ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்று ‘மோடி… மோடி…‘ என்று ஆர்ப்பணித்தனர்.
போரூர் வந்தடைந்த பிரதமர் மோடி, பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அப்போது தமிழக முதல்வர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன்பின்னர், மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பயணித்தனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளின்கீழ் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய 5 பகுதிகள் இன்று சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழிப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர், போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்கிறார். பிரதமர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
மதியம் 1:30 மணியளவில், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மார் ரூ.3,700 கோடி மதிப்பிலான முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
மேலும் ரூ.750 கோடி மதிப்பில் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தமிழகத்தில் கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கவும் சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர், சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் குரூப் 3,4 லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஐஐடி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அங்கு விழா மலரை வெளியிட்டு உரையாற்றுகிறார்.
