‘உண்மையான அ.தி.மு.க. த.வெ.க.வுடன் இணைந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் மட்டும்தான் தனியாக இருக்கிறார்கள்’ என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த கட்ட ஆலோசனைக்கு தயாராகிவிட்டார் எஸ்.பி.வேலுமணி!

அதிமுக கோட்டைகளாகக் கருதப்பட்டு, கடந்த பொதுத்தேர்தலில் வென்ற தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில், தவெக சார்பில் களமிறங்கிய மரகதம் குமரவேல் மற்றும் பி.சத்யபாமா ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இந்த இருவருமே அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள். தற்போது வெளியான முடிவுகளில் தவெக முதலிடத்தையும், திமுக இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் தப்பியிருந்தாலும், 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. என மும்முனை போட்டி உறுதியாகியிருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்த மூன்று கட்சிகளில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும். ‘அ.தி.மு.க. தீர்ந்துபோன சக்தி இல்லை’ என்பதையும் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.

ஆனாலும், “கட்சியின் வாக்கு வங்கி மளமளவென சரிகிறது; எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்“ என்ற முடிவுக்கு பல எம்.எல்.ஏ.க்கள் வந்துவிட்டதாகக் தெரிகிறது. இதனால் கூடுதல் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர். அதனால்தான் என்னவோ, இன்னும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என முதலில் ஆதவ் அர்ஜுனா கூறிவிட்டு, சாரி, 5 தொகுதிகள் என்றார்.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில், அதிமுகவின் கொங்கு மண்டல முக்கியத் தலைவரான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) காலை ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியில் உள்ள பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே, அதிமுகவின் 3-ல் 2 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து, எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் இரட்டை இலை சின்னத்தையும் அதிகாரத்தையும் பறிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட வியூகத்தின் போது, 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், 25 பேர் மட்டுமே ஆதரவளித்தனர். இதனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் திட்டம் கைக்கூடாமல் போனது. கடைசியில் இவர்களை எடப்பாடி மன்னித்து ஏற்றுக்கொண்டார். அத்துடன் அதிமுகவை உடைக்கும் முயற்சியும் தற்காலிகமாகப் பின்வாங்கியது.

சட்டமன்றத்தில் உள்ள அதிமுக உறுப்பினர்களில் சுமார் 31 முதல் 32 பேர் தனியாகப் பிரிந்து ஒரு புதிய அணியாக உருவெடுத்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் பதவி இழக்க மாட்டார்கள். 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து வந்தால், எடப்பாடி பழனிசாமி தலைமை தனிமைப்படுத்தப்படும். பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் ஆதரவோடு தேர்தல் ஆணையத்தை அணுகினால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படவோ அல்லது புதிய அணியின் கைக்குச் செல்லவோ வாய்ப்பு ஏற்படும்.

தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு இந்த அணி தள்ளப்பட்டால், ஆளுங்கட்சி எந்தவித எதிர்க்கட்சி நெருக்கடியும் இன்றி முழு பலத்துடன் செயல்படும். இடைத்தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சி ஒருபுறம், உட்கட்சிப் பூசல் மறுபுறம் என அதிமுக இப்போது வரலாறு காணாத கடுமையான அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அக்டோபர் 11-ல் நடைபெறும் எஸ்.பி. வேலுமணியின் கூட்டம் தமிழக அரசியலில் அடுத்தகட்ட திருப்பத்தை உருவாக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

ஆக மொத்தத்தில் ‘ஆதவ் ஆபரேசன்’ எஸ்.பி.வேலுமணி தலைமையில் சக்சஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal