தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தரமான உணவுப் பொருட்கள் விற்பனையை முறைப்படுத்தும் வகையில், உணவுக் கூடங்கள் வசதியுடன் கூடிய பார்களுக்கான புதிய டெண்டர் இன்னும் ஒரு மாதத்திற்குள் கோரப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கலந்த இனிப்பான செய்தி. இனிமேல் பார்களில் பழைய, சுகாதாரமற்ற ஸ்நாக்ஸ்களை விற்க முடியாது. டாஸ்மாக் பார்களிலேயே ‘உணவுக் கூடங்கள்’ வசதியைக் கொண்டுவந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அதிரடி சோதனைகளை நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவை பீளமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோவை பீளமேட்டில் நடைபெற்ற முகாமில் மாணவர்களுக்குக் கல்விக்கடன்களை வழங்கிய பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே. விக்னேஷ் இதுகுறித்துக் கூறியதாவது: “டாஸ்மாக் பார்களுக்கான புதிய டெண்டர்கள் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும். இந்த பார்களில் உணவுக் கூடங்கள் அமைப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும். இதன் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டாஸ்மாக் பார்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தரம் குறைந்த அல்லது சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்படும். இந்த நடவடிக்கை பார்களில் உணவு விற்பனையை முழுமையாக முறைப்படுத்தும்.
மது ஆலைகளில் இருந்து மதுப் பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “கடந்த கால ஆட்சிகளில் நீண்ட காலத்திற்குக் கொள்முதல் செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 120 நாட்களே ஆகின்றன. இன்னும் 1,400 நாட்களுக்கு மேல் எங்களது ஆட்சிக்காலம் உள்ளது. விரைவில் இத்துறை சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் முழுமையாகச் சீரமைக்கப்படும். அ.தி.மு.க அல்லது தி.மு.க-வுடன் தொடர்புடைய ஆலைகளுக்கு மட்டுமே கொள்முதல் ஆர்டர்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை; அத்தகைய குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன்” என்று கூறினார்.
கோவையில் உள்ள ‘FL-2’ பார்கள் மீதான நடவடிக்கை குறித்துப் பேசிய அமைச்சர் விக்னேஷ், “பொதுவாக விதிமீறலில் ஈடுபடும் திலி-2 பார்களை 30 அல்லது 60 நாட்கள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டு, பின்னர் மீண்டும் திறப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்துள்ளது. திலி-2 பார்கள் வருவாயைப் பெருக்கும் நோக்கிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது FL-1 மதுபானக் கடைகளை முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது முடிந்ததும் எங்களது கவனம் முழுமையாக திலி-2 பார்கள் பக்கம் திரும்பும்” என்று அமைச்சர் விக்னேஷ் குறிப்பிட்டார்.
