தமிழக மக்கள் தற்போது இடைத்தேர்தலை விரும்பவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலை அவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்ளவும் தயாராக இல்லை என்பது களநிலவரத்தை பார்க்கும்போது தெரிகிறது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பார்ப்போம்..!
கடந்த திராவிட ஆட்சிக்காலங்களில் ‘எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என தொகுதி மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். காரணம், ஒவ்வொரு நாளும் ஆண்களுக்கு பிரச்சாரம் முடிந்ததும் ஒரு குவார்ட்டர், ஒரு மட்டன் பிரியாணி! பெண்கள் என்றால், காலையில் ரூ.500, மாலையில் ரூ.500 என ஒரு நாளைக்கு ரூ.1000 ரூபாய் கிடைக்கும்! தவிர ஆங்காங்கே கிடாக்கரி குழம்பு வாசனையும் மூக்கத் துளைக்கும்!
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குக்கு ரூ.1000 கொடுத்ததோடு, (கோவையில் ஒரு ஓட்டுக்கு ‘10’, லால்குடியில் ஒரு ஓட்டுக்கு ‘5’ என்பது தனிக்கதை) தினசரி உபசரிப்பையும் கவனித்தது. ஆனால், த.வெ.க. சார்பில் ஒரு சில இடங்களில் மட்டும் குறைவான ‘கவனிப்பு’ நடந்தது. மற்ற இடங்களில் யாரும் வாக்குக் கேட்டுக்கூட சென்றதாக தெரியவில்லை.
இந்த நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறைந்தது 15 கோடி ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.22 கோடி வரை செலவு செய்தும் வெற்றி பெற முடியவில்லை.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலர் கடனைக் கட்ட முடியாமல் தற்போதுவரை (பலர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை கடனையே அடைக்க முடியாமல் தவித்து வருகிறார்களாம்) திணறி வருகிறார்கள். ஏன் திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றச் சம்பவம் அப்படியே மறைக்கப்பட்டது. இப்படி வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டுதான் மக்கள் த.வெ.க.வுக்கு வாக்களித்து விட்டனர்.
இந்த நிலையில்தான் மதுராந்தம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளுமே ‘விட்டமினை’ இறக்குவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். காரணம், மக்கள் நம்மிடம் வாங்கிக்கொண்டு வாக்குகளை மாற்றி செலுத்திவிடுகிறார்கள் என்ற கோபம்தானாம்!
இந்தப் பின்னணியில்தான் ‘இடைத்தேர்தல் நடந்தும் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே? பிரியாணி, குவார்ட்டர் கூட கிடைக்காது! தினமும் வாக்குகேட்க செல்லும்போதுக்கூட கவனிப்புகள் கிடைக்குமா? என்று தெரியவில்லை. என்ற எண்ணத்தில்தான் மக்கள் இடைத்தேர்தலை விரும்பவில்லை’ என்கிறார்கள்.
விலைவாசி உயர்வு… மின்கட்டண உயர்வு… ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளை… என மக்கள் தாங்க முடியாத சுமையில் இருந்தாலும், விஜய்யை பார்த்தவுடனேயே அந்த சுமைகள் எல்லாம் காணாமல் போய்விடுகிறது என்ற நிலைமைதான் இன்று வரை இருக்கிறது.
எனவே, இந்த இடைத்தேர்தல் த.வெ.க.வின் 100 நாட்கள் ஆட்சிக்கு எடைத்தேர்தலாக அமையுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
