இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைப்பதற்கு வெளியில் ஆதரவு அளித்தது.

மேலும், தவெக தலைமையிலான கூட்டணி அறிவிப்பு தொடர்பான 2 கூட்டங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை. இந்நிலையில் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘வரவிருக்கும் இடைதேர்தலில் யாருக்கு ஆதரவு என நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுக்கும். தவெகவை சார்ந்த நிர்வாகி ஒருவர் இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு எங்களிடம் பேச வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

எங்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதால், பொறுத்திருக்குமாறு அவர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்பு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். குதிரை பேரங்களில் எப்போதும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் அமைப்பாக கூடி அரசியலாக முடிவு எடுத்துள்ளோம். அதையே நாட்டு மக்களிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம். தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ கட்சி தலைமைதான் தான் முடிவு எடுக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பகைமுரண் பாஜகதான்.

எங்களுக்கு திமுக, அதிமுக, தவெகவுடன் பகை இல்லை. அரசியலில் விமர்சனம் என்பது எப்பொழுதுமே இருக்கும். ஆனால் அது ஜனநாயகத்தில் வெறுப்பு அரசியலை முன்வைத்து விடக்கூடாது. மற்ற கட்சிகள் எங்களை விமர்சிக்குமே என்ற எண்ணத்தில் இல்லாமல் நாங்கள் எங்கள் முடிவுகளை எடுப்போம்.

மற்ற கட்சிகளின் விருப்பம் சார்ந்த நாங்கள் முடிவெடுக்க முடியாது. தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆளுநர் மூலமாக தமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமைந்துவிடக் கூடாது. மக்கள் அளிக்கும் தீர்ப்புக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம். விசிகவிற்கும் எங்களுக்கும் கருத்து முரண் இல்லை, நட்பு முரண்தான் உள்ளது’’ என்று அவர் கூறினார்.

இதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “இடைத் தேர்தல் தொடர்பாக இன்று எமது கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் நாளை மாநில குழு கூட்டம் கூடி இறுதி முடிவை அறிவிக்கும்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal