தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெகவிற்கு செக் வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தொகுதிக்கான பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது தவெக. இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்த நிலையில், அந்த கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அதே நேரம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த நிலையில், தேர்தல் வழக்கு காரணமாக 5 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளது திமுக, மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யாவும் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து இந்த தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
