மக்கள் தலைவர் ஜயா ஜி.கே.மூப்பனாரின் 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 30)அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க. சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்ரீநாத் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசும்போது, ‘‘இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஐயா மூப்பனாரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், த.வெ.க. அரசு எப்படி ஒரு லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ? அதனை கொள்கையாகவே வைத்திருந்தவர் ஐயா மூப்பனார். அதே போல் காமராஜர் வழியில் அரசியலில் தன் கொள்கைப் பிடிப்புடன் இருந்தவர் மூப்பனார். இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தபோதுக்கூட பதவிக்காக ஆசைப்படாமல், மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் ஐயா மூப்பனார்’’ என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., பீட்டில் அல்போன்ஸ், கே.வி.தங்கபாலு, ரூபி மனோகரன் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, ‘‘தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் கிங் மேக்கராக ஐயா மூப்பனார் இருந்திருக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தை ஆரம்பிக்கும் போது நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், ‘திரிணாமுல் காங்கிரஸ் மாதிரி காங்கிரஸை எதிர்த்து நமது இயக்கத்தை ஒரு பேரியக்கமாக மாற்ற வேண்டும்’ என்றார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த மூப்பனார் அவர்கள், உடனடியாக எழுந்து இந்தப் பேச்சை கண்டித்தார். ‘தமிழ் மாநில காங்கிரஸ் காங்கிரசுக்கு எதிரான இயக்கம் கிடையாது’ என்பதை அப்போதே, அந்த மேடையிலேயே பதிவு செய்தார் மூப்பனார். அதே போல் அந்தக் காலகட்டத்தில் 40 எம்.எல்.ஏ.க்கள், 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் த.மா.கா. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், டெல்லி சென்று அன்னை சோனியா காந்தியை ‘என்றும் உங்களுடன் நட்பில் இருப்போம்’ என்று சொன்னவர் ஐயா மூப்பனார்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசும்போது, ‘‘தமிழகத்தின் தலைநகரில் அமைந்திருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு இடம் கொடுத்தவர் மூப்பனார். இவரிடத்தில்தான் நாங்கள் எல்லோரும் அரசியல் பண்புகளை கற்றோம். காமராஜர் வழியில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் ஐயா மூப்பனார்’’ என்று அவரது பெருமைகளை பேசினார்.

அடுத்தாக பேசிய தமிழருவி மணியன், ‘‘வெறுப்பு அரசியல் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் அன்பு அரசியலை எங்களுக்கு கற்றுக்கொடுத்தது ஐயா மூப்பனார்தான்’’ என்று சொல்லி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பாலாஜி, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முத்தரசன், ரங்கராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி எம்.பி., துரைவைகோ, என்.ஆர்.தனபாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்!

காங்கிரஸ் சார்பில் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி கலந்துகொண்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal