தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தடுமாறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ‘‘நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், தொகுதி மறுவரையறைக்கும் சம்பந்தமே கிடையாது. திருத்தப்பட்ட அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்தம் செய்வதே பாஜக அரசின் நோக்கமாக உள்ளது’’ என்றார்.
தொகுதி மறுவரையறையைக் கொண்டுவந்தால் தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையும் என்றும், இதை எப்படி ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆனால் அந்த குரலை நெறித்து சட்டத்தை இயற்ற பாஜக அரசு முயற்சி செய்து வருகிறார்கள். அதனால் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்கள். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலில் ஒரு சில வாரங்கள் திமுகவினர் தடுமாறினார்கள். நாங்கள் No delimitation என்று சொல்லும் போது, திமுகவில் இரண்டு குரல்கள் Fair delimitation என்ற சொற்றொடரை கொண்டு வந்தார்கள். அந்த குரல்களும் தற்போது அடங்கிவிட்டதாக நினைப்பதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதில் அதிமுக தவிர தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.
‘தி.மு.க.வின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது’ என உடன் பிறப்புக்கள் கொந்தளித்து வரும் நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க.வை தங்களுடைய நிலைப்பாட்டிற்குள் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிப்பது ஏன் என்ற கேள்வியும் அறிவாலயத்தில் எழுகிறது.
