2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. குறிப்பாக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததுதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் மறுசீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டு கட்சியின் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன, குறிப்பாக, திமுகவின் கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், 110 கட்சி மாவட்டங்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை மட்டும் 10 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக மக்கள்தொகை கொண்ட சோழிங்கநல்லூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் கட்சி மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, முன்னாள் அமைச்சர்கள் வசம் இருக்கும் தொகுதிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில முன்னாள் அமைச்சர்களின் கட்சி மாவட்டங்களுக்கு தலா 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தங்கம் தென்னரசு பொறுப்பில் விருதுநகர், சிவகாசி, திருச்சுழி என 3 தொகுதிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதே போன்று, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, சைதாப்பேட்டை, வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேபோல், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொறுப்பில் துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் என 3 தொகுதிகள் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

இதுவரை ஒரே மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் அதிக தொகுதிகள் இருந்தது தற்போது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாகியுள்ள சென்னை வடக்கு மாவட்டத்தில் கொளத்தூர், பெரம்பூர் என 2 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டால், இதுவரை சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த கொளத்தூர் தொகுதி கைமாறும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோற்ற கொளத்தூர் தொகுதி என்பதால் இந்த மாற்றம் திமுக வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதனால் சேகர்பாபுவிடம் இருந்த கொளத்தூர், இனி புதிய மாவட்டச் செயலாளர் வசம் செல்ல வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் சேகர்பாபு வசமுள்ள சென்னை கிழக்கு மாவட்டத்தில் துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே போன்று, திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகளிலும் மாற்றம் நடந்துள்ளது. திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்தார் அன்பில் மகேஷ். தற்போது அவரது கட்டுப்பாட்டிலிருந்த தொகுதிகள் 3ல் இருந்து 2 ஆக குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில், திருச்சி கிழக்கு மாநகரத்திற்குள் வருவதால் 2 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் துறையூர் (தனி), முசிறி இரண்டு தொகுதிகள் மட்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜின் மகன் கருணை ராஜாவை மாவட்டமாக நியமிக்க கே.என்.நேரு முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே கருணை ராஜாவுக்கு முசிறி தொகுதியில் போட்டியிடும் வாய்பையும் கே.என்.நேரு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அனைத்து மாவட்டங்களிலும் திமுகவின் கட்சிரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், நெல்லையில் மட்டும் 3ல் இருந்து 2 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன் நெல்லை, மத்தி, நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 3 கட்சி மாவட்டங்களாக இருந்த நிலையில், தற்போது வடக்கு மற்றும் தெற்கு என குறைக்கப்பட்டுள்ளது. திமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாவட்ட மறுசீரமைப்பு வரும் தேர்தல்களின் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெரியும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal