தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கும் இடையே இருந்த போட்டையை உடைத்து தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்பதை உறுதி செய்ததோடு, 2026ல்ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்து விட்டது த.வெ.க.!
2029ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் (இண்டியா கூட்டணி) இடையேதான் போட்டி என்ற நிலையை த.வெ.க. உடைக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள். இது தொடர்பாக த.வெ.க. பல மாநிலங்களில் தற்போதே காய்நகர்த்தத் துவங்கியிருக்கிறது என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் ஏன் இந்திய அரசியலிலேயே யாரும் கண்டிராத வெற்றியை த.வெ.க. தலைவர் விஜய் பெற்றிருக்கிறார். அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஒருவர் முதலமைச்சர் ஆன சரித்திரமோ, வரலாறோ இல்லை. ஆனால், அதனை விஜய் செய்து காட்டியிருக்கிறார்.

தற்போது, கேரளாவில் த.வெ.க.வை கட்டமைக்கும் பணி துவங்கியிருக்கிறது. கர்நாடகாவிலும் மாநில பொறுப்பிற்கு ஒருவரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் சமீபத்தில் தெலுங்கானா சென்று அங்கும் த.வெ.க. வுடன் கூட்டணி வைப்பதற்காக முக்கிய அரசியல் கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
வட இந்தியாவில் பா.ஜ.க. கோலோச்சி வரும் நிலையில் தென்னிந்தியாவை குறி வைத்து விஜய் காய்நகர்த்தி வருகிறார். ஏற்கனவே தென்னிந்தியாவில்தான் கூட்டணி பலத்துடன் காங்கிரஸ் ஓரளவு தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறது. அந்த வெற்றியை உடைக்க ஆயத்தமாகி வருகிறார் விஜய்.
தவிர, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியமான வாக்கு வங்கியும், பாஜகவுக்கு எதிரான வலுவான அடித்தளமும் உள்ளது. குறிப்பாக, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பும் நடுநிலை மற்றும் சிறுபான்மையின வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிக்கே சென்று சேரும்.
ஆனால், தவெக தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற அடையாளத்துடன் தமிழ்நாடு தாண்டி அண்டை தென் மாநிலங்களிலும் வேட்பாளர்களைக் களம் இறக்கினால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் இரண்டு அல்லது மூன்று அணிகளாகச் சிதறும் சூழல் உருவாகும். மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே பிரியும்போது, அது எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும்.
ஒரு தொகுதியில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரியும் பட்சத்தில், குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றாலும் ஒரு கட்சி எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும். குறிப்பாக, தென் மாநிலங்களில் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய பலமான மாற்று வாக்குகள் விஜய்யின் புதிய கட்சிக்குச் சென்றால், அது பல முனைகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எளிதாக வெற்றி பெற வழிவகுக்கும்.
வட மாநிலங்களில் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு நீடிக்கும் நிலையில், தென் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டு வாக்குகளைப் பிரிப்பது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக மிகப்பெரிய சாதகமாக அமையும். இந்த வாக்கு வங்கிப் பிரிப்பு விவகாரமே காங்கிரஸ் தலைவர்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.
இருப்பினும், தவெக தரப்பைப் பொறுத்தவரை, தாங்கள் யாருக்கும் மாற்று அல்ல என்றும், தேசிய அளவில் காங்கிரஸ் செய்யத் தவறிய வலுவான எதிர்க்கட்சி இடத்தை நிரப்பவே முயற்சிப்பதாகவும் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும், 2029-ல் விஜய்யின் இந்த தனித்த தேசிய அரசியல் ஆசை பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, நரேந்திர மோடியின் தலைமை மீண்டும் மத்தியில் நிலைபெற ஒரு ‘கேம் சேஞ்சராக’ மாறிவிடுமா என்ற கேள்வி தேசிய அரசியல் வட்டாரத்தில் பலமாக எதிரொலிக்கிறது’’ என்றனர்.
