நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரிய தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், இதில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் புதிய அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரியத் தேநீர் விருந்தை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், இக்கூட்டணியைப் புறக்கணித்து தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி இதில் கலந்துகொண்டது தேசிய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தி.மு.க தலைமையிலான கூட்டணி கலைந்தது. 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்த விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு எதிரான இந்தியா கூட்டணி கலைந்தது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ஐ.யூ.எம்.எல் கட்சிகளை தி.மு.க-வினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், தி.மு.க மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டி வருவதாக காங்கிரஸ், த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த சூழலில்தான், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. மிகவும் குறைவான செயல்பாடுகள் உடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இரு அவைகளின் நடவடிக்கைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஆகியோரால் தங்களது அறைகளில் தேநீர் விருந்து உபசரிப்பு அளிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்த நிலையில், தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி பங்கேற்றது கவனம் பெற்றுள்ளது.
மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா வியாழக்கிழமை அளித்த பாரம்பரிய தேநீர் விருந்தை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் புறக்கணித்தன. இருப்பினும், இந்த வழக்கமான சந்திப்பில் நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். மக்களவை சபாநாயகர் அளித்த தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி கனிமொழிப் பங்கேற்றது அரசியல் அரங்கில் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மக்களவை சபாநாயகரின் அறையில் நடைபெற்ற இந்தத் தேநீர் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவை சபாநாயகரும் குடியரசு துணை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அளித்த தேநீர் விருந்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
சமீபத்தில்தான் ‘அரசியலில் நிரந்திர எதிரியும் இல்லை… நிரந்திர நண்பனும் இல்லை’ என தமிழக பா.ஜ.க. தலைவர் வானதி சீனிவாசன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது!
