தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கு தயாரானது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ பி. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனால், திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தடையை நீக்க வேண்டும் எனக் கோரி விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதுள்ளனர். சி.விஜயபாஸ்கர் அளித்த மனுவில், ‘தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த தவெக வேட்பாளர் முருகேசன் தேர்தல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக மூன்றாவது இடத்தில் இருந்த திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் தான் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதனால் ஒருவேளை என்னுடைய வெற்றி செல்லாது என அறிவித்தாலும் கூட திமுக வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அதனால் இடைத்தேர்தல் நடத்த அனுமதித்தால் எந்த ஒரு சிக்கலான சூழல் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கரூர் முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கரூர் தொகுதியில் 80 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் என்னுடைய வெற்றி செல்லாது என அறிவித்தாலும் தவெக வேட்பாளர் மதியழகனோ அல்லது வேறு எந்த வேட்பாளராக இருந்தாலும் அவர்களை கரூர் தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதியாக அறிவிப்பதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக தொகுதி மக்கள் பிரதிநிதி இல்லாமல் பாதிக்கப்படக்கூடாது. அதனால் இந்த தடையை நீக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு மனுக்களும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
