டாஸ்மாக் கடைகள் பார்களை டெண்டர் எடுக்க புது விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை எடுக்கப்பட்டவர்கள் இல்லாமல் புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் 200 கோடியை தாண்டி வருவாய் கொட்டி வருகிறது. அதே நேரம் டாஸ்மாக்கில் பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு, மதுபான கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் வாங்குவதை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 25% ஊதியத்தை உயர்த்திக்கொடுத்த தவெக அரசு, இனி டாஸ்மாக் பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளோடு இணைந்து பார்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்களை ஏலம் எடுப்பதில் பல போட்டிகள் இருக்கும். இருந்த போதும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த ஏலத்தில் பார்களை கைப்பற்றும் வகையில் பழைய நடைமுறை நீடித்து வந்தது. இதனை புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு மாற்றி அமைத்துள்ளது.
அந்த வகையில், டாஸ்மாக் மதுபான கடைகளையொட்டி மது கூடங்கள் நடத்த ஆன் லைன் மூலம் டெண்டர் விடும் போது இடத்தின் உரிமையாளர் தடையில்லா சான்று தேவை என்ற விதி காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மது கூடம் நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை மூலம் இனிமேல் மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் மதுபான கூடம் அமைக்க முடியும் மேலும் 15 சதுர மீட்டர் குறைந்த பட்ச அளவு என்பது 20 சதுர மீட்டர் என்று மாற்றப்பட்டது
அதாவது குறைந்த பட்ச அளவு 205 சதுர அடிகள் மது கூடம் இருக்க வேண்டும் இதனை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுகூட ஒப்பந்தம் டெண்டர் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் வழிவகைகள் மாற்றப்பட்டுள்ளது.
