எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ‘‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’’யாகி போய்விட்டது. அ.தி.மு.க. தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், இன்றைக்கு அக்கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் பழனிசாமி பேசும்போது, “கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகள் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.
சமூக வலைதளங் களில் நமது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். இளைஞர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் அமைக்க ஒவ்வொரு நிமிடமும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.மாற்றுக் கட்சிக்குச் சென்றவர்களைப் பற்றிக் கவலையில்லை; ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள்” என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் சிலர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குச் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தொண்டர்கள் சோர்வடைந்துள் ளனர். தற்போது ஆங்காங்கே முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவதால், எதிர்வரும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும், கட்சியை மீண்டும் பலப்படுத்தி திமுக மற்றும் தவெகவுக்கு இணையான போட்டியை அளிக்கவும் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அப்போதுதான் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் சிதறாமல் கிடைக்கும்” என்று ஆக்ரோஷமாக வாதிட்டிருக்கிறார்கள்.
இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிசாமி, “கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை நான் பார்த்துக்கொள் கிறேன்; நீங்கள் உங்களுக்கான தேர்தல் பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள்” எனக் கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ‘டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க வேண்டும்’ எனக் கோரிக்கை எழுந்தபோது, ‘அவர் வேறொரு கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்’ என்று பழனிசாமி பதிலளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல் மதுரை மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் தென்மாவட்ட நிர்வாகிகள், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பகிரங்கமாகத் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால், பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில் ஆத்தூர் இளங்கோவனின் ஆதிக்கத்தால் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, முன்னாள் மாநகர் மா.செ. ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் த.வெ.க.வுக்கு தாவிவிட்டனர். அ.தி.மு.க.வின் சீனியரான கு.ப.கிருஷ்ணன் ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அவருக்கு வாரியத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்க விரும்பும் டி.டி.வி.தினகரன், சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதை விரும்பவில்லையாம்!
