எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டமன்றத்துக்குள் முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என வன்முறையை தூண்டும் வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார் எனவும், அவர் மீது சட்டப்பேரவை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னி அரசு கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார். இது குறித்து தவெகவினர் அளித்த புகாரின் பேரில் இன்று அதிகாலையில் விளாத்திக்குளம் போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மார்க்கண்டேயன் கைதுக்கு முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்பி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். எல்லாருக்கும் எலும்புகள் உண்டு என அவர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

‘‘சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே மேனாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர்.இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal