த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து வரும் நிலையில், ‘அரசு பணி வழங்குவதை அரசியலாக்க வேண்டாம்’ என மனிதாபிமானத்தின் மறுவுருமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
‘‘கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘“தமிழக அரசு -கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்குவதை அரசியலாகப் பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு கரூர் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி கொடுப்பதாக முடிவு செய்திருப்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவாகவே பார்க்க வேண்டும். கட்சி சார்ந்த பொதுக்கூட்டம், ஏற்பாடுகள், அதில் சாதகம், பாதகம் என்று பார்த்தால் அதற்கு கேள்வி எழும்போது விசாரணையின் மூலம் விடை கிடைக்கும். இருப்பினும் தமிழகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது என்பது இதுவரை நடக்காத ஒரு வேதனையான சோகமான சம்பவம்.
இதுபோன்ற மிகத்துயர சம்பவத்தை நாம் மனிதாபிமான நோக்கத்தோடு அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும், பந்தோபஸ்துகளும் பின்பற்றப்பட வேண்டும். அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவருக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எனவே கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் கவனத்தில் கொண்டு அரசுப்பணி அறிவித்து உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் பார்வை இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் கருத்தாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
