ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் தற்போது ஆளுநராக இருக்கும் அர்லேகரும் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…

கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , ‘‘பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க த.வெ.க. அரசுடன் இணைந்து செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சரிடம் கூறுவேன்.

ஆளுநரிடம், அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் தெரிவியுங்கள், நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்னை’’ என்று கூறியிருக்கிறார்.

ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றைப் பற்றி பேசியதும், ஆலோசனைக் கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அர்லேகரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்,‘‘ சார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. உடைந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 22 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது பெரும்பான்மை இல்லாமலேயே எடப்பாடி பழனிசாமி (பா.ஜ.க. தயவில் என்று கூறப்பட்டது) முதலமைச்சராக தொடர்ந்தார். இடைத்தேர்தலில் நூலிழையில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக தொடர்தார்.

அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசைப் பகுதியில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளும் கூட்டுப் பண்ணைத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நிகழ்ச்சியின் இறுதியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொதுமக்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்து அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது த.வெ.க. தலைமையிலான ஆட்சியிலும் ஆளுநர் உள்ளே நுழைவதாக ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ‘பொதுமக்கள் ஆளுநர் மாளிகையிலும் புகார் தெரிவிக்கலாம்’ என அர்லேகர் அதிரடியாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டுக்குள் த.வெ.க. சென்றுவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது’’ என்றனர்.

‘அ.தி.மு.க. நேரடியாக கூட்டணி வைத்திருக்கிறது… தி.மு.க. மறைமுகமாக கூட்டணி வைத்திருக்கிறது…’ என்று கூறும் த.வெ.க. நிர்வாகிகள், ‘தங்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன உறவு? என்பதை வெளிப்படையாக தெரிவிப்பார்களா? என்பதே எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal