2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடும் என நினைத்து பலரும் பல கோடிகளை வாரியிறைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
குறிப்பாக அ.தி.மு.க.வில் இந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களிடம் முன்கூட்டியே ‘10 சி’ கொடுத்தவர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டது. பல ‘மாஜி’க்கள் ‘10 சி’ கொடுக்க தயங்கியதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு பைசா கூட செலவு செய்யாமல் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுதான் தி.மு.க., அ.தி.மு.க.வை திக்குமுக்காட வைத்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முதற்கொண்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் வரை த.வெ.க. பக்கம் தாவுகின்றனர்.
இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆளுங்கட்சியான தவெக நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்த திடீர் கட்சித் தாவல்களுக்குப் பின்னால் மிகப்பெரிய ‘பொருளாதாரச் சிக்கல்’ மற்றும் கடன் நெருக்கடி ஒளிந்திருக்கிறது.
தேர்தல் செலவுகளுக்காக ஃபைனான்சியர்களிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிர்வாகிகள், தங்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகவே ஆளுங்கட்சி பக்கம் தஞ்சமடைந்து வருவதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன.
தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலில் வென்றுவிடலாம் என்ற முனைப்பில், பல முக்கிய நிர்வாகிகள் தங்களின் சொந்த சொத்துக்களைப் அடமானம் வைத்தும், அரசியல் ஃபைனான்சியர்களிடம் கோடிக்கணக்கில் வட்டிக்குப் பணம் பெற்றும் தேர்தல் களத்தில் வாரி இறைத்துச் செலவு செய்துள்ளனர்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது அதிமுக எதிர்பாராத பலத்த அடியை சந்தித்ததுடன், 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு பின்னடைவைச் சந்தித்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு, பணம் கொடுத்த ஃபைனான்சியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களின் அசலையும் வட்டியையும் உடனடியாக திருப்பி தருமாறு அதிமுக நிர்வாகிகளுக்குக் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஃபைனான்சியர்களின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவும் ஒரே வழி ஆளுங்கட்சியான தவெகவில் இணைவதுதான் என்று பலரும் முடிவு செய்து இணைந்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியான தவெக-வில் இணைவதன் மூலம் தங்களின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் குறைத்து கொள்ள முடியும் எனப் பல அதிமுக விஐபிக்கள் கணக்கு போடுகின்றனர். அதிமுகவில் நிர்வாக பொறுப்பில் மட்டும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை இதுதான். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெல்லுமா என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
சீனியர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெக நோக்கி நகர்வதால், அவர்களை பின்பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் சாரை சாரையாக செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது’’ என்றனர்.
திருச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் தோல்வியடைந்த விரக்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இந்த தகவல் அறிந்த எடப்பாடி தரப்பு அவருக்கு ரூ.50 லட்சம் செட்டில் செய்து, குடியிருக்கும் வீட்டையாவது மீட்டுக்கொள்ளுங்கள் என கொடுத்திருக்கிறது.
கொடுமை… கொடுமை… ‘அம்மா இருக்கும் போது குப்பன்… சுப்பன் ஆகியோரால் எம்.எல்.ஏ. ஆக முடிந்தது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆன பிறகு பத்து கோடி முன்பணமாக கொடுப்பவர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டு வருகிறது இந்தக் கொடுமையை எங்குபோய்ச் சொல்ல?’ என பொறுமிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகளும்..!
