தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அந்த 4 தொகுதிகளும் காலியாகியுள்ளதாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது.

ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 4 தொகுதிகள் சேர்ந்து மொத்தம் 5 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதற்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைதேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொடங்க அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
