“முதல்வர் விஜய் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.” என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். ரேஷன் கார்டுகள், முதியோர் உதவித் தொகை, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை எப்படி எளிதாக கிடைக்கும் வகையில் நிறைவேற்றுவது என ஆய்வு செய்ய உள்ளோம்.
ஆன்லைன் முறையில் பதிவு செய்யும்போது, சில நேரங்களில் கால தாமதம் ஏற்படுவதாகக் குறைகள் உள்ளது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவுடன், அந்தந்த வருவாய் வட்டத்தில் விஏஓக்கள் ஆய்வு செய்து அந்தப் பணிகளை 5 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு நிலங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆய்வு செய்யவுள்ளோம். பட்டா மாறுதலில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். தமிழகத்தின் பேரிடர் மேலாண்மை பணிக்கு ரூ.1000 கோடி தேவை என சொன்னோம், அதனை முன்னெச்சரிக்கையாகவே மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
முதல்வர் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மாரிதாஸ் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது தனிப்பட்ட விமர்சனமாக இல்லாமல் மக்கள் வளர்ச்சிப் பணிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடே வளர்ச்சியடையும்.” என்று தெரிவித்துள்ளார்.
