திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஸ்டாலின் ஆலோசித்தாரம். அடுத்த ஓரிரு நாட்களில் ஸ்டாலின் சில அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி அறிவாலயத்தில் விசாரித்தபோது, ‘‘சார், சமீபத்தில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தங்களது ரகசிய அறிக்கையை கட்சித் தலைமையிடம் நாளை (10ம் தேதி) சமர்ப்பிக்க போகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில், கட்சி ரீதியாக மிகப்பெரிய அதிரடியான மாற்றங்களைச் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இந்த அதிரடி மாற்றத்தின் முதல் கட்டமாக, திமுகவின் அதிகார மையங்களாக விளங்கும் மாவட்ட செயலாளர்களின் பதவிகளில் கை வைக்க கட்சித் தலைமை துணிந்துவிட்டது. ஏனென்றால் திமுகவில் மொத்தம் 78 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் கட்டுப்பாட்டில் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 6 சட்டப்பேரவை தொகுதிகள் வரை உள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவை ஒரே நபர் கவனிப்பதால், கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.

இவைகளை சரிசெய்யும் பொருட்டு, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 78 என்ற எண்ணிக்கையிலிருந்து 100-க்கும் மேல் அதிரடியாக உயர்த்த திமுக அதிரடி மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த புதிய திட்டத்தின்படி, மாவட்டங்கள் மேலும் பல துண்டுகளாக பிரிக்கப்படும் பட்சத்தில், ஒரு மாவட்ட செயலாளரின் கீழ் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 4 தொகுதிகள் மட்டுமே வரும்.

இதன் மூலம் தொகுதி பணிகளை மிகத் துல்லியமாகவும், தீவிரமாகவும் கவனிக்க முடியும் என்று தலைமை நம்புகிறது. இந்த எல்லை மறுவரையறை பணிகள் எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். இந்த ஒட்டுமொத்த மாற்றத்தில் தொண்டர்களை மிகவும் உற்சாகப்படுத்தியிருப்பது என்ன தெரியுமா? புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு யாரை நியமிக்கப் போகிறார்கள் என்பதுதான்.

பல ஆண்டுகளாகவே எந்தவிதமான அங்கீகாரமும் எதிர்பாராமல், கட்சிக்காக உழைத்து தேய்ந்த மூத்த மற்றும் விசுவாசமான நிர்வாகிகளுக்கு இந்த முறை முன்னுரிமை தர ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். அதேசமயம், மக்கள் மத்தியிலும் கட்சிக்குள்ளும் பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, தலைமைக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் தற்போதைய மாவட்ட செயலாளர்களைக் கட்டம்கட்டி தூக்குவதற்கும் பட்டியல் தயாராகிவிட்டது.

குறிப்பாக இந்த புதிய லிஸ்ட்டில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் முக்கியப் பொறுப்புகளை வாரி வழங்க தலைமை உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. சீனியர்களின் ஆதிக்கத்த குறைத்து, புது ரத்தத்தை பாய்ச்சும் இந்த அதிரடி நடவடிக்கையால், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று திமுகவின் இளம் தலைமுறையினர் ஆவலோடு காத்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம், தங்களின் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் மாசெக்கள் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளனராம்.

குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சில ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சேர்மன்கள் அடிட்ட நிர்வாகிகளையும், ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் தங்களை மட்டுமே ‘வளப்’படுத்துக்கொண்டுள்ளனர். இது திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் நடந்திருக்கிறது. இதனால் சொந்தக் கட்சிக்காரர்களே சோர்வடைந்து (யார் வெற்றி பெற்றால் என்ன?) கட்சிக்கு விசுவாசமாக வேலை பார்க்கதாததால்தான் திருச்சியில் கே.என்.நேரு மட்டும் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றிருக்கிறார். மற்ற இடங்களில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தவிர கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவின் பெயரைப் பயன்படுத்தி சில ஒன்றியச் செயலாளர்கள் போட்ட ‘ஆட்டம்’தான் தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு காரணம் என அறிவாலயத்திற்கும் ஏராளமான புகார்கள் வந்திருந்தன.

அதே போல் மதுரை மாவட்டத்திலும் நடந்த உட்கட்சிப் பூசல், மாநாகராட்சியில் நடந்த ஊழல் விவகாரம் என ஒட்டுமொத்தமாக கைகோர்த்து, ஒட்டு மொத்த மதுரையிலும் தி.மு.க.வின் தடம் தெரியாமல் செய்துவிட்டது. எனவே, சில ஒன்றியச் செயலாளர்கள் உள்பட மாவட்டச் செயலாளர்கள் வரை நடவடிக்கை பாயும்’’ என்றனர்.

ஆக மொத்தம் விரைவில் வெளியாக போகும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, திமுகவின் உட்கட்சி அரசியலில் ஒரு புயலை கிளப்பப் போகிறது என்று மட்டும் தெரிகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal